Sunday, 30 July 2023
பெட்ரோல், டீசல் போடும்போது கண்டிப்பாக இத கவனிங்க மக்களே!
சென்னை: தற்போது பெட்ரோல், டீசல் விலை என்பது உச்சத்தில் உள்ளது. இதனால் பைக் முதல் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தும் அனைவரும் அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் நாம் பெட்ரோல், டீசல் நிரப்பும்போது முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். இதை செய்தால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு அதிக ‛மைலேஜ்' கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது கடந்த ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் என்பது செய்யப்படவில்லை .
அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.102.73க்கும், பெங்களூரில் ரூ.101.94க்கும், மும்பையில் ரூ.106.31க்கும், டெல்லியில் ரூ.96.72க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் இன்று சென்னையில் ரூ.94.33க்கும், பெங்களூரில் ரூ.87.89க்கும், மும்பையில் ரூ.94.27க்கும், டெல்லியில் ரூ.89.62க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை என்பது தற்போதைய விலையை விட குறைந்து இருந்தது. இதனால் தற்போது வாகனங்களை பயன்படுத்தும் மக்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் கூட கடந்த ஓராண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் அப்படியே தொடருவது சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் நாம் அதன் தரத்தை ஒருபோதும் சோதனை செய்தது இல்லை. வாகனங்கள் அத்தியாவசியமாக இருப்பது மற்றும் தினமும் பெட்ரோல், டீசல் போடுகிறோம் என்பதால் அதன் தரத்தை பரிசோதிப்பதே இல்லை. இதனால் பல நேரங்களில் நாம் ஏமாந்து விடுகிறோம்.
அதோடு மட்டுமின்றி தரம் குறைந்த பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்புவது ‛மைலேஜ்' அளவை குறைத்து விடுமாம். இதனால் நாம் அனைவரும் உஷாராகி பெட்ரோல், டீசலின் தரத்தை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். இதை எப்படி செய்வது? என கேட்கிறீர்களா?. ரொம்ப எளிமையான விஷயம் தான் இது.
அதாவது நாம் பெட்ரோல், டீசல் நிரப்பும் இயந்திரத்தை உற்று கவனிக்க வேண்டும். அந்த இயந்திரத்தில் நாம் பெட்ரோல், டீசல் நிரப்பும் அளவும், ஒரு லிட்டர் எரிபொருளின் விலையையும் நமக்கு காட்டும் டிஸ்பிளேயின் அருகே ‛Density' (அடர்த்தி) என ஒரு டிஸ்பிளே இருக்கும். இதனை பெரும்பாலானவர்கள் ஒருபோதும் கவனிப்பது இல்லை. ஆனால் இதுதான் முக்கியம். இந்த ‛Density' அளவு தான் பெட்ரோல், டீசலின் தரத்தை குறிக்கும். அதாவது பெட்ரோலின் Density என்பது 730 முதல் 800 Kg per Cubic Meter (Kg/m3) என்ற அளவிலும், டீசலை பொறுத்தமட்டில் Density என்பது 830 முதல் 900 Kg per Cubic Meter (Kg/m3) என்ற அளவில் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அளவில் ‛Density' இருந்தால் அது தரமான பெட்ரோல், டீசல் என கூறலாம். இதன்மூலம் வாகனங்களின் மைலேஜ் அதிகரிக்கவும் செய்யுமாம்.
மாறாக சில பெட்ரோல், டீசல் நிலையங்களில் அரசு நிர்ணயம் செய்த ‛Density' அளவு பின்பற்றப்படுவது இல்லை என கூறப்படுகிறது. அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது அது நமது வாகனங்களின் மைலேஜை குறைத்து நமக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தும். நம்மில் பலர் இதுவரை இந்த விஷயம் தெரியாமல் ஏமாந்து இருக்கலாம். சரி போனது போகட்டும். மாறாக இனி பெட்ரோல், டீசல் நிரப்ப பங்கிற்கு சென்றால் கண்டிப்பாக ‛Density' எனும் டிஸ்பிளேவை பார்த்து நாம் நிரப்பும் பெட்ரோல், டீசல் தரமானதாக இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருவேளை குறிப்பிட்ட பெட்ரோல், டீசல் பங்கில் சரியில்லை என்றால் அருகே ‛Density' சரியாக இருக்கும் பெட்ரோல் நிலையங்களை தேர்வு செய்து பயன்படுத்துங்கள் மக்களே.
எங்கள் Telegram குழுவில் இணையுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment